தாளவாடி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் - கிராம மக்கள் அச்சம்!
தாளவாடி அருகே கல்குவாரியில் குட்டியுடன் சிறுத்தை உலாவியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தாளவாடி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரத்துக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள சூசையபுரம், பீம் ராஜ்நகர், தொட்டகாஜனூர், ஓசூர் ஆகிய கிராமப்பகுதிகளில் விவசாய தோட்டங்கள் அதிகம் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடுகள் மற்றும் தோட்ட காவலில் இருந்த நாய்களை சிறுத்தைகள் தாக்கியுள்ளன. இதுபோன்ற சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அச்சத்துடன் இருந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் சிறுத்தை அடர்ந்த வனத்திற்குள் சென்று இருக்கலாம் என விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் ஓசூர் கிராமத்தை ஒட்டியுள்ள கல்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் (ஜூன் 24) மாலை நேரத்தில் குட்டியுடன் சிறுத்தை ஒன்று கல்குவாரி பகுதிக்குள் சென்றது. இதனை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்த விவசாயிகள் பார்த்துள்ளனர்.