கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடக்கம் - வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு இன்று காலை (மார்ச்.05) சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர்.
தொடர்ந்து பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பாதிரியார்கள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இயேசு உயிர்த்தெழுந்த தினமாக கருதப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.
மேலும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் இந்த நாட்களில் நோன்பு இருந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கின்றனர். இதன் அடையாளமாக தான் இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது.