சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம்! எங்கு தெரியுமா?
ஜப்பானின் ஒரு மாகாணத்தில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி கடந்த வாரம் சட்டம் இயற்றப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார்கள். அதற்கேட்ப ஒரு நாட்டில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகாட்டா ப்ரீஃபெக்சர் மாகாணத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு என்றே மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கியுள்ளது இந்த சட்டம். ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாள் மக்கள் சிரிப்பதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் சிரிப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கவும் அலுவலக நிர்வாகங்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர ஜனநாயக கட்சி (எல்டிபி) இந்த சட்டத்தை இயற்றியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. "சிரிப்பதும் சிரிக்காமல் இருப்பதும் மனிதர்களின் அடிப்படை உரிமை, சிரிக்க முடியாதவர்களை சட்டம் கட்டாயப்படுத்த முடியாது" என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிரிக்காமல் இருந்தால் எந்தவித தண்டனையும் கொடுக்க இந்த சட்டத்தில் இடம் கொடுக்கப்படவில்லை.
இந்த சட்டமானது யமகாட்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையியே கொண்டுவரப்பட்டுள்ளது. 40 வயதுக்கு அதிகமான 17,152 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அந்த ஆய்வறிக்கையில், இறப்புக்கான அனைத்துவிதமான காரணங்கள் மற்றும் இதய நோய்கள், அதிகமாக சிரிப்பவர்களை காட்டிலும் குறைவாக சிரிப்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதனால் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டதாம்.