பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் - திரையுலகினர் இரங்கல்!
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'சிஐடி சங்கர்' என்ற படத்தில் அறிமுகமானதால், 'சிஐடி' சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'திருடன்', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி', 'பாரத விலாஸ்', 'ராஜராஜ சோழன்', 'பொன்னூஞ்சல்', 'என் அண்ணன்', 'இதயவீணை' என ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவரின் இறப்புக்கு திரைப்பிரபலங்களும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.