டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் விடுப்பு ரத்து... உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார பணிகளை முடுக்கி விடும் வகையில், அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அவசரகால நடவடிக்கையாக, விடுப்பில் உள்ள மருத்துவ ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்பையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விடுப்பில் உள்ள ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணி விடுப்பில் உள்ள அனைவரும் 13ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.