பரபரப்பான அரசியல் சூழலில் #Delhi தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்!
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கினர். வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த நிலையில், இன்று (பிப்.5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லியின் முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகின்றனர்.வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றினார். அதேபோல், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லி நிர்மன் பவான் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
மேலும், டெல்லி முதலமைச்சர் அதிஷி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். ஆலிஸ் வாஸ், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.