எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - உண்மையை ஒருபோதும் நீக்க முடியாது என ராகுல் காந்தி பேட்டி!
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உண்மையை ஒருபோதும் நீக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக, அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்களை அவர் மக்களவையில் எழுப்பினார்.
நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசிய போது மைக் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தவிவகாரங்களை மையப்படுத்தி மக்களவையில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து தான் பேசியிருக்கிறார்கள். ஆனால் இங்கே ஹிந்துகள் என்று கூறிக்கொள்ளும் சிலரோ, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்துத்தான் பேசுகிறார்கள். பாஜகவினர் உண்மையான ஹிந்துக்கள் அல்லர் என்றார்.
அதேபோல அக்னிவீரர் திட்டத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர் பலியானால், அவரது மரணத்தை வீர மரணமாக இந்த அரசு ஏற்காது. ஒரே ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரருக்கு அதிகப்படியான சலுகை கிடைக்கும், மற்றவருக்குக் கிடைக்காது என்றால் அது ராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்தும். அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது, பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் திட்டமே அக்னிவீரர்கள் திட்டம் என பல கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதில் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்துக்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சில பகுதிகளும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களும் மற்றும் அக்னிவீர் மற்றும் சபாநாயகர் குறித்து பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
”பிரதமர் நரேந்திர மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தில் உண்மையை ஒரு போதும் நீக்க முடியாது. நான் சொல்ல வேண்டியதைத்தான் சொன்னேன், அதுதான் உண்மை. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நீக்கலாம். உண்மை எப்போதும் உண்மையேயாகும்" என்று அவர் தெரிவித்தார்.