“அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” - வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.
நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும். செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .
இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும். எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.