லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் - ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!
கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரத்தில், 34.11 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் 65 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கி மோசடி செய்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை விசாரணை துவங்கியது. குறிப்பாக வங்கியில் வாங்கிய பணத்தை தொழில் மேம்பாட்டிற்காக பயன்படுத்தாமல் சட்டவிரோத பண பரிமாற்றம் மேற்கொண்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் அடிப்படையில், வங்கியில் தவறான நகை இருப்பு உள்ளிட்டவற்றை கணக்கு காட்டி கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும் மோசடி செய்து வாங்கப்பட்ட கடனை தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 60
சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஆண்டு வட்டி என்ற அடிப்படையில் அதிக வட்டிக்கு
வாங்கிய கடனை அடைத்ததும், தொழில் அல்லாத விவகாரத்தில் வங்கி கடனை
பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும் நகை கடைகளில் உள்ள தங்க கட்டிகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தியதும் மட்டுமல்லாது, அதை பிட்காயின்களில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. நாட்டிற்கு வெளியே பிட்காயின்களில் முதலீடு செய்து கணக்கில் காட்டாமல் சொத்துக்களை சேர்த்தது தெரியவந்துள்ளது. இந்த கிரிப்டோ கணக்குகள் மூலமாக கிடைக்கப்பெற்ற பணத்தில் 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டை சென்னையில் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கியில் கடனுக்காக சில சொத்துக்களை அடமானமாக லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ்
நிறுவனம் வைத்துள்ளது. கடனை செலுத்தாததால் அடமானம் வைத்த சொத்துக்களை வங்கிகள் ஆன்லைன் மூலமாக ஏலம் விட்டுள்ளது. அதனைத் தெரிந்து கொண்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள், தங்கள் ஊழியர்களை பினாமி போல்
பயன்படுத்தி, அடமானம் வைத்த சொத்தையே மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதும்
தெரிய வந்துள்ளது. சந்தை மதிப்பில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஆறரை
கோடிக்கு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் வங்கிக்கு இழப்பை
ஏற்படுத்தி மோசடி செய்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள
சுமார் 34.11 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள நான்கு நிலங்கள் மற்றும் ஒரு வீட்டு மனை ஆகிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.