லாரியஸ் விருதுகள் 2023: சிறந்த வீரர் ஜோகோவிச்; சிறந்த வீராங்கனை பொன்மட்டி!
இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பின் 2023-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் விதமாக லாரியஸ் அமைப்பு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு லாரியஸ் அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : மதுரை சித்திரை திருவிழா -திருமஞ்சனமாகி சேஷ வாகனத்தில் தேனூர் புறப்படும் கள்ளழகர்!
இதில் 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. லாரியஸ் விருதுக்கான போட்டியாளர்கள் பெயர்களை, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறை சார்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன. பின்னர், லாரியஸ் உலக விளையாட்டு அகாடமியை சேர்ந்த 71 உறுப்பினர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில், விருது பெறும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த அணி, சிறந்த மீட்சி, சிறந்த மாற்றுத்திறனாளி போட்டியாளர்,நல்லெண்ண விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த வீரர் - நோவக் ஜோகோவிச் (டென்னிஸ்)
கடந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ன் மூலம், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஒரே டென்னிஸ் வீரராக வரலாறு படைத்திருக்கிறார் ஜோகோவிச். ஜோகோவிச் இந்த விருது வெல்வது இது 5-ஆவது முறையாகும். இதற்கு முன், 2019, 2016, 2015, 2012 ஆகிய ஆண்டுகளிலும் வென்றிருக்கிறார்.
சிறந்த வீராங்கனை - அய்டானா பொன்மட்டி (கால்பந்து)
ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி தனது முதல் உலகக் கோப்பையை கடந்த ஆண்டு கைப்பற்றியதில் முக்கியப் பங்காற்றியவர் மிட்ஃபீல்டரான பொன்மட்டி. போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் பால் விருது பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் பேலன் தோர் விருதும் வென்றுள்ளார்.
சிறந்த அணி -ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை 1-0 கோல் கணக்கில் வென்று தனது முதல் உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி. பரிந்துரைக்கப்பட்ட முதல் முறையே ஸ்பெயின் மகளிர் அணி இந்த லாரியஸ் விருதை வென்றிருக்கிறது.
அதேபோல, அசாத்திய முன்னேற்றத்திற்கான விருதை ஜூட் பெலிங்கம் (கால்பந்து),சிறந்த மீட்சிக்கான விருதை சைமன் பைல்ஸ் (ஜிம்னாஸ்டிக்ஸ்), சிறந்த மாற்றுத்திறனாளி போட்டியாளருக்கான விருதை டைட் டி குரூட் (வீல்சேர் டென்னிஸ்), சிறந்த அதிரடி விளையாட்டு போட்டியாளருக்கான விருதை அரிசா டிரியு (ஸ்கேட் போர்டிங்) மற்றும் நல்லெண்ண விருதை ரஃபா நடால் அறக்கட்டளை உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.