மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 26) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான, கேப்டன் பிராத்வெயிட் 61 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களிலும் வெளியேறினர்.
இவர்களையடுத்து ஆடிய ஜோஷ்வா டா சில்வா 49 ரன்களில் வெளியேறினார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 75.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி 18 ரன்னிலும், பென் டக்கெட் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மார்க் வுட் ரன் எதுவும் எடுக்காமலும், ஆலி போப் 10 ரன்களிலும் மற்றும் ஹாரி ப்ரூக் 2 ரன்களிலும் வெளியேறினர். இங்கிலாந்து அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இந்த நிலையில், ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி 100 க்கும் அதிகமான ரன்களை சேர்த்தது. உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 58 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 125 ரன்கள் பின் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.