டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம் தகவல்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதந்தோறும் வசூலாகும் ஜிஎஸ்டி விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 10 சதவீதம் உயர்ந்து, ரூ.1.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
“கடந்த 2022 டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில், 2023 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் டிசம்பர் மாத வருவாயைவிட, 10.3% அதிகம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.26,814 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9,888 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!
2022-ம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.13.40 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023 ஏப்ரல்-டிசம்பர் மாதம் வரை மொத்த ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் உயர்ந்து ரூ.14.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது." இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.