குன்னூரில் கனமழையால் மண்சரிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
குன்னூரில், கனமழையில் மண் சரிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வர முடியாமல் ஆனைப்பள்ளம் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 60 க்கும்
மேற்பட்ட குரும்பர் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை
பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவ.23) இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இக்கனமழையால் ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையில் இடி விழுந்து மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டது.
இதில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 6 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர். அரசு உடனடியாக கிராமத்திற்கு செல்லும் சாலையில் விழுந்துள்ள மண், மரங்களை அகற்றி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.