நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு - மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!
தொடர் மழை காரணமாக மாஞ்சோலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், கிராம மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தூத்துக்குடியை புரட்டிப்போட்ட வெள்ளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு..!
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக தங்களை மீட்க உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.