திருவண்ணாமலையில் மண் சரிவு - வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !
நிலச்சரிவு ஏற்பட்ட திருவண்ணாமலை தீபமலையில் புவியியல் ஆய்வாளர் தலைமையிலான குழு இன்று ஆய்வை தொடங்கியுள்ளது .
பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவினால் மலை மீது இருந்த 35 டன் எடை கொண்ட பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் . அப்போது மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தால் மீட்பு பணியில் சற்று தாமதம் ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ,தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் போராட்டத்திற்கு பின் வீட்டில் இருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் திருவண்ணாமலையில் அடுத்தடுத்து மூன்றாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு தீப திருவிழாவிற்கும் முன்னதாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.நிலச்சரிவு ஏற்பட்ட தீபமலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இன்று ஆய்வை தொடங்கியுள்ளது .இந்த குழுவுடன் காவல்துறை, மருத்துவ குழு, வனத்துறை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் . ஆய்வுக்கு பின் பக்தர்களை மலை மேல் அனுமதிப்பது குறித்து தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது .