For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நில மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

12:21 PM Aug 30, 2024 IST | Web Editor
நில மோசடி வழக்கு   முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி
Advertisement

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது
வழக்குப் பதியப்பட்டது. ஆனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் , பிரவீன் உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். இதனிடையே வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர் சேகர் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஆர்.சேகரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம், விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் ,
அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை
காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு
வழக்கறிஞர் உதயகுமார் தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் கைது செய்து விசாரிப்பது குறித்து புலன் விசாரணை அதிகாரி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்ஆர் விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார்.

Tags :
Advertisement