நில மோசடி புகார் | நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக களம் கண்டவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் கடந்த 1999ம் ஆண்டு வெளியான ராஜகுமாரடு திரைப்படத்தின் மூலம் காதாநாயகன் அவதாரம் எடுத்தார். இவர் தற்போது நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் வெளியாகி ரியல் எஸ்டேட் மூலமாக இருவர் பாலப்பூர் என்ற இடத்தில் ரூ.34.80 லட்சத்திற்கு மனைகளை வாங்கினர்.
இந்த நிலையில், அந்த நிறுவனம் அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மோசடி செய்து வருவது மனைகளை வாங்கியவர்கள் மாவட்ட ரங்கா ரெட்டி நுகர்வோர் மன்றத்தில் புகார் கொடுத்தனர். விளம்பர படத்தில் நடித்ததால் மகேஷ் பாபுவும் சிக்கலில் மாட்டியுள்ளார். அதன்படி, அந்த புகாரின் படி நுகர்வோர் ஆணையம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ் சந்திரகுப்தா மற்றும் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், அவர்கள் நாளை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனம் விளம்பரத்தில் நடிப்பதற்காக மகேஷ் பாபுவிற்கு ரூ. 3.4 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.