சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்தனர்.
அவர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை, பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இருந்து 2500 சிறப்பு பேருந்துகளும், சென்னை, விழுப்புரம், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் இருந்து 3 சிறப்பு ரயில்களும் இயக்கபடுகிறது.
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட
வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏதுவாக மாடவீதி மற்றும் தேரடி வீதி
பகுதிகளில் நீண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.