ஆடி மாத கடைசி ஞாயிறு... படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்குவது படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (11.08.2024) ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இந்த கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் பொங்கள் வைத்து ஆடு கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் அங்க பிரதட்சனம் செய்தும், அம்மன்களை தலையில் சுமந்தும், வேப்பஞ்சேலை கட்டியும் ஆலயத்தை வளம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை, வேலூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு தரப்பில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. இருப்பினும் ஏராளமானோர் தனியார் வாகனங்களில் வருகை தந்ததால் சந்தவாசலில் இருந்து படவேடு வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெருசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் சந்தவாசல் போலீசார் திணறினர்.