விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பிய தொழிலாளார் குவைத் தீவிபத்தில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்!
குவைத் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் செஞ்சி பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப்(35) என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.
இந்த தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும், பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல் இன்று காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்பிடிசி நிறுவனம் தலா 8 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் என்பிடிசி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சார்ந்தவர்
முகமது ஷெரீஃப்(35).இவருக்கு அஷ்ரப்னிஷா(29) என்ற மனைவியும்,நூர் ஹம்சா(9)
மற்றும் நூர் ஷரிபா(5) என்ற இருமகள்கள் உள்ளனர்.ஐடிஐ படித்துள்ள முகமது ஷெரிப்
குவைத் நாட்டில் மங்காஃப் பகுதியில் உள்ள NBTC என்ற ஸ்டீல் கம்பெனியில்
போர்மேன் ஆக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாத
விடுமுறையில் வந்திருந்த முகமது ஷெரிஃப் விடுமுறை முடிந்து கடந்த மே மாதம்
29-ஆம் தேதி தான் குவைத் சென்றுள்ளார். கடைசியாக செவ்வாய்கிழமை தனது மனைவியுடன் செல்போனில் பேசி உள்ளார்.
பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த அவரது
குடும்பத்தினர் முகமது ஷெரிப் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அவர்
செல்போன் அழைப்பை எடுக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி
அடைந்தனர்.மேலும் அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்களை தொடர்பு கொண்ட போது தீ விபத்தில் முகமது ஷெரிப் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருவதாக தெரிவித்து ஒரு புகைப்படத்தையும் அனுப்பியதாக தெரிகிறது.அதை பார்த்த அவரது குடும்பத்தினர் இது முகமது ஷெரிப் இல்லை என்று கூறி கவலை அடைந்தனர்.
தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் முகமது
ஷெரிப்பும் உயிரிழந்து இருப்பதாகவும் அயலக தமிழர்துறை சார்பில்
தெரிவிக்கப்பட்டதால் முகமது ஷெரிப் குடும்பத்தினர் மிகுந்த வேதனை
அடைந்துள்ளனர். விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற 15 நாட்களில் முகமது ஷெரிப்
உயிரிழத்தது அவரது மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள்,அவரது தந்தை மற்றும் அவரது
குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவரது மனைவி மற்றும் அவரது தந்தை முகமது ஷெரிஃப் உடலை
கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகமது ஷெரீப்
உயிரிழப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசாங்க வேலையும்,
பிள்ளைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை
வைத்துள்ளனர்.