For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
07:52 PM Aug 27, 2025 IST | Web Editor
எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
”எல் முருகனின் பேச்சு அதிமுக ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது”   விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
Advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கட்சி நிர்வாகியின் புதிய இல்ல திறப்பு
நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  கலந்துக்கொண்டார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

”குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். அவரை குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவராக ஏற்கனவே இருந்தவரை கட்டாயப்படுத்தி பதவி விலக செய்துள்ளனர். அவருடைய நிலை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய இல்லத்தை சுற்றி இராணுவ துருப்புகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என தெரிய வருகிறது. குடியரசு துணைத் தலைவருக்கே இப்படி ஒரு நெருக்கடி நம்முடைய நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்புகளால் ஏற்பட்டிருக்கிறது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ராகுல் காந்தி அவர்கள்
வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன. பாஜக மற்றும் சங்க பரிவார அமைப்புகள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்குத் திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. அதனை கண்டித்து இப்போது பீகாரில் ராகுல் காந்தி யாத்ரா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் பிகருக்கு சென்றிருப்பதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

அதிமுகவினர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டார்கள் என்பதற்கு
எல்.முருகனின் கேள்வியே ஒரு சான்றாகவுள்ளது. அதிமுகவை பெரியார் வழிவந்த திராவிட இயக்கம் என்று தான் தமிழ்நாடு நம்பி கொண்டுள்ளது. ஆனால் அந்த இயக்கத்தை கோல்வார்க்கர், வீரசாவர்க்கர் வழிவந்தவர்கள் வழி நடத்தலாம், அப்படி வழி நடத்தினால் ஒன்றும் தவறில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது என்பதை கவலை அளிக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போவது கவலை அளிக்கிறது. அதிமுகவை விழுங்குவதற்கு அந்த இயக்கம் பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இது அதிமுகவிற்கு மட்டுமே பாதிப்பு இல்லை, தமிழ்நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement