உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - கேரள அரசு அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் குவைத்திலேயே வசித்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குடியிருப்புகளில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.
குவைத்தில் செயல்பட்டு வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தங்குவதற்காக குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப்பில் அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளது.
6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்றிரவு குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினர். இருப்பினும் பலர் தீயின் கோரபிடியில் சிக்கினர்.
இதற்கிடையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் இருந்து கீழே குதித்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயில் கருகியும், புகையின் காரணமாக மூச்சுத்திணறி கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என தெரிய வந்த நிலையில் இதில், கேரளாவை சேர்ந்த 19 பேர் இதுவரை உயிரிழந்ததாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்தது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்கிறார். இறந்தோர் உடல்களை கேரளா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வீணா ஜார்ஜ் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.