கும்பகோணம் | கொடியேற்றத்துடன் தொடங்கிய சாரங்கபாணி கோயில் தைப்பொங்கல் திருவிழா!
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப் பொங்கல் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஜன. 06) காலை கொடியேற்றம் நடைபெற்றது.
108 வைணவ தலங்களில் மூன்றாவது திருத்தலமாக கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி ஆலயம் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பொங்கல் தேரோட்டம் திருவிழாவினை முன்னிட்டு இன்று (ஜன. 06) அதிகாலை இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா தொடங்கியது.
இதையொட்டி கொடிமரத்திற்கு முன்பாக சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருடக்கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் ஜன. 14-ம் தேதி தைப்பொங்கலன்று அதிகாலை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.