கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம் கேலாகலம்!
கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று நடைபெற்ற
தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ராமநவமி திருவிழா கடந்த
9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .
இத்திருவிழா தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. திருத்தேரில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்டியளித்தனர். இத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.