#Kumbakonam | திருமண சர்ச்சை எதிரொலி... மக்கள் எதிர்ப்பால் மடத்தின் பொறுப்பை அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார் ஆதீனம்!
கும்பகோணம் சூரியனார் கோயில், மடத்தின் பொறுப்பு மற்றும் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக ஆதீனம் மகாலிங்க சுவாமி எழுதிக் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதினத்தின் 28-ஆவது தலைமை மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமி (54). இவர் கர்நாடகாவைச் சேர்ந்து 47 வயதான பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆதீனமாக இருப்பவர் எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்பது பற்றிய சர்ச்சை கிளம்பிய போது, இதற்கு முன் இருந்த மடாதிபதிகள் திருமணம் செய்துள்ளனர் என்று மகாலிங்க சுவாமிகள் விளக்கம் அளித்தார்.
இந்த சூழலில், சூரியனார் கோயில் ஆதீன மடத்தின் முன் நேற்று (நவ.13) ஒன்று திரண்ட ஊர் மக்கள் சிலர், ஆதீனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். திருமணம் செய்து கொண்டதால் நீங்கள் மடத்தில் இருக்கக் கூடாது என்று கூறி, ஆதீனத்தை வெளியேற்றி மடத்துக்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து ஆதீனம் மகாலிங்க சுவாமிகள், அதே ஊரில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். ஆதீனத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு தரப்பினர் வாக்குவாதம் செய்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
கிராம மக்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக சூரியனார் கோயில் ஆதீனம், மடத்தின் பொறுப்பு மற்றும் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக மகாலிங்க சுவாமி எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார். மேலும், இந்த மடத்தின் நடவடிக்கைக்கு இந்து அறநிலை துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.