குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா | உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடி செலுத்திய பக்தர்கள்!
குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் காணிக்கையாக ரூ.4.57 கோடி செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான தசரா திருவிழா அக்.3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகியது. நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷா சூரசனை வதம் செய்வதோடு தசரா நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக நிறைவடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : INDvsNZ | டெஸ்ட் போட்டியில் விரைவாக 1,000 ரன்கள்…ஜெய்ஸ்வால் புதிய சாதனை!
இந்த தசரா திருவிழாவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி, குலசேகரன்பட்டின முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தர்களால் ரூ.4 கோடியே 57 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு தசரா திருவிழாவை விட, இந்த ஆண்டு கூடுதல் காணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.