“கோடிகளுக்கு ஈடாகாத மாபெரும் வெற்றியை குகேஷ் வாங்கி வந்துள்ளார்” - பாராட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
“எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாத மாபெரும் வெற்றியை வாங்கி வந்துள்ளார்” என குகேஷுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

“தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு சென்று இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகமே திரும்பி பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளார் குகேஷ். தனது 18 ஆவது வயதில் 18 ஆவது உலக சாம்பியனாக உயர்ந்துள்ள குகேஷை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழ்நாடும் பெருமை கொள்கிறது. உலக அளவில் செஸ் என்றால் சென்னை. சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும் குகேஷின் சாதனை உறுதி செய்துள்ளது.
குகேஷின் பெற்றோர் இளம் வயதிலேயே அவரை ஊக்குவித்து அவரை இந்த அளவிற்குக் கொண்டு வந்துள்ளனர். குகேஷின் சாதனையை நினைத்து அவரது பெற்றோர் மகிழ்வதை போலவே நமது திமுக அரசும் மகிழ்கிறது.
சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் முன்பே நமது திமுக அரசு குகேஷிற்கு ஊக்கத்தொகை வழங்கினார்கள். எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாத மாபெரும் வெற்றியை வாங்கி வந்துள்ளார். அதனால் தான் குகேஷுக்கு வாழ்த்துக்களோடு பரிசுத்தொகையையும் முதலமைச்சர் அறிவித்தார். குகேஷ் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கட்டும். அதற்கு நமது அரசு உடன் நிற்கும். கிரிக்கெட்டை போல குகேஷின் வெற்றி, செஸ் விளையாட்டையும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்த்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக பல நூறு கிராண்ட் மாஸ்டர்கள் நமது கிராம புறங்களில் இருந்து வருவார்கள். உலகின் செஸ் தலைநகராகச் சென்னை உயரும்” என்று தெரிவித்தார்.