நாகார்ஜுனாவை தொடர்ந்து #KTRன் பண்ணை வீடு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக புகார் - HYDRAA அதிகாரில் நேரில் ஆய்வு!
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் NConvention ஐ தொடர்ந்து பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமாராவின் பண்ணை வீடு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக கூறி HYDRAA அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
தெலங்கனா மாநிலம் ஹைதராபாத்தை ஒட்டியுள்ள மாதப்பூரில் N Convention என்ற பெயரில் அரங்கு செயல்பட்டு வருகிறது. இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம்.
இந்நிலையில் ஆக. 24 அன்று காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. N Convention அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக நாகார்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். அது சட்டவிரோத கட்டடம் எனில் நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தால் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன். நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் ஹைதராபாத் BRS கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவின் பண்ணை வீட்டை ஹைட்ரா ஆய்வு செய்தது. இதேபோல துண்டிகலில் உள்ள பிஆர்எஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான மல்லா ரெட்டியின் கல்வி நிறுவனங்கள் மற்றும் AIMIM கட்சியினருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக ஹைட்ரா அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சங்கர்பள்ளி தொகுதியின் ஜன்வாடா கிராமத்தில் உள்ள கே.டி.ஆரின் பண்ணை வீட்டில் நேற்று பேரில் வருவாய் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் ஹைட்ராவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கூட்டாக ஆய்வு நடத்தியது. உஸ்மான் சாகர் நீர்த்தேக்கத்தை இணைக்கும் கால்வாயை ஆக்கிரமித்து இந்த பண்ணை வீடு கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் நடத்த ஜன்மாஷ்டமி விழாவில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தான் மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி, அதர்மத்தை அழிக்க வேண்டும்என பகவத் கீதையில் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, மாபெரும் பாவம். இவை மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதனால், கட்டிடங்களை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.