கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கே.ஆர்.எஸ். அணை. இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இதனால் இந்த அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு பகுதியும் அமைந்துள்ளது.
அந்த பகுதிகளில் தற்போது தொடர் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பிவிடும் என்று கருதப்பட்டது. அதன்படி நேற்று மாலையில் கே.ஆர்.எஸ். தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி முழுமையாக நிரம்பியது. கே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 39,965 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில், இந்த அணையில் இருந்து 50,000 கன அடி முதல் 80,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.