கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும், போலியான இணையதள முகவரியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக போலியான இடஒதுக்கீடு ஆணை மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தவும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திவ்ய தர்ஷினி என்ற மாணவிக்கு சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறி ரூ.29,25,000 பணம் செலுத்துமாறும், ரஃப்யூதின் என்ற மாணவருக்கு ரூ.23,75,000 கட்டணம் செலுத்துமாறும் போலி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
இது கவனத்திற்கு வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இதுபோன்ற போலியான இணையதள முகவரியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.