கிருஷ்ணஜென்ம பூமி - ஈத்ஹா மசூதி வழக்கு : ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு!
கிருஷ்ணஜென்ம பூமி - ஈத்ஹா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது இருதரப்புக்கும் நன்மை எனக்கூறி, வழக்கை ஏப்ரல் மாதம் ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு பிறகு மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணஜென்ம பூமி - ஈத்ஹா மசூதி விவகாரம் சமீப ஆண்டுகளாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
சாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் என்பதால் மசூதியை அகற்ற வேண்டும் என மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் 1968ம் ஆண்டு ஏற்பட்ட நில தொடர்பான ஒப்பந்தம் சட்டவிரோதமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் சிவில் நீதிமன்றம், மதுரா மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்டவையில் தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க கோரி இந்து அமைப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
அனைத்து மனுக்களையும் ஒன்றிணைத்து விசாரிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, இஸ்லாமிய குழுவினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக இணைக்க கூடிய முடிவில் உச்ச நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இஸ்லாமிய பிரிவு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் ஒன்றுக்கு ஒன்று சார்ந்தவையாக இல்லாத நிலையில், அவற்றை இணைத்து விசாரிப்பதனால் புதிய சிக்கல்கள் எழக்கூடும் என்பதால் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தலைமை நீதிபதி, அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரிக்க கூடிய முடிவு இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் எனவும், இது தேவையற்ற நடவடிக்கைகளை தடுக்கக் கூடும் எனவும் கருத்து தெரிவித்தார். மேலும், வழக்கை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஒருங்கிணைத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிப்பதனால் எந்த வேறுபாடுகளும் உருவாகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.