#MadrasHighCourt தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார்.
புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்மூலம் கே.ஆர்.ஸ்ரீராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 34-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே.ஆர்.ஸ்ரீராமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர். ஸ்ரீராமின் முழுபெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்ற கே.ஆர். ஸ்ரீராம், 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.