நேபாள பிரதமராக 4-வது முறையாக பதவியேற்றார் சர்மா ஒலி!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன் பிறகு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவர் சர்மா ஒலி கடந்த வாரம் திரும்பப் பெற்றார். இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்த சர்மா ஓலி, நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபாவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதாக அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : “தாத்தா இல்லை… ஸ்டாலின் மட்டும் தான்” – குழந்தையிடம் செல்லமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதற்கிடையே, நேபாள நாடாளுமன்றத்தில் ஜூலை 12ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் பிரசண்டா தோல்வியடைந்தார். இதையடுத்து அதிபரைச் சந்தித்த கே.பி.சா்மா ஒலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். அதிபா் ராம் சந்திர பவுடலால் புதிய பிரதமராக சர்மா ஒலியை நேற்று நியமித்த நிலையில், இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, அந் நாட்டின் பிரதமராக சர்மா ஒலி நான்காவது முறையாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.