#KozhipannaiChelladurai உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்'' - இயக்குநர் சீனு ராமசாமி!
'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படம் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார்.
இயக்குநர் சீனு ராமசாமி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது. அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவான இது செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் மேத்யூ கூறியதாவது :
"மிகவும் உணர்வுபூர்வமான மேடை இது. எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த விஜய் சேதுபதி, யோகி பாபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த திரைப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் அனைவரும் தங்களின் கடுமையான உழைப்பை வழங்கி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகி பாபு கூறியதாவது :
''மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியுடன் நிறைய நேரம் பேசி இருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் யாரை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஆண்டவன் கட்டளை' படத்திலிருந்து நானும் விஜய் சேதுபதியும் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்தப் பயணம் தற்போது வரை இனிமையாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது :
''சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையில் அழகாக இருக்கிறார்கள். படத்தின் கதையும் அழகாக இருக்கிறது. சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது, எத்தனை முறை இந்த தேனியில் அவர் படம் எடுத்தாலும், அவர் நூறு படம் எடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் தேனியை வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பார்.
புதிதாக காண்பது போல் இருக்கும். அதுதான் அவருடைய பலம். இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தனுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஏகன் கூறியதாவது :
''விஜய் சேதுபதி வருகை தந்து என்னைப் பற்றி இங்கு குறிப்பிட்ட வார்த்தைகள் எனக்கான சுமையை அதிகரித்து விட்டது என நினைக்கிறேன். நடிகர் யோகி பாபு படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய சீனியாரிட்டியை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் உடன் இருந்து வழி நடத்தினார். இதற்காக யோகி பாபுவிற்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிகவும் உணர்வுபூர்வமான படைப்பு. இந்தத் திரைப்படத்தை பார்க்கும் போது ஏதாவது ஒரு கதாபாத்திரம் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும். இந்த தொடர்பை தன்னுடைய இசை மூலம் பலப்படுத்தியவர் இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பால் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை” – பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கம்!
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாவது :
''சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு திரைப்படம் தயாராகிறது, திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது, வசூல் செய்கிறது. அதன் பிறகு அந்த திரைப்படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கை. கதை என்றால் அது என் நிலம் தான். என் மண்ணுடன் தொடர்புடையது.ஏகன் ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமானவர். அத்துடன் நடனம், உடற்பயிற்சி, நடிப்பு என அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தார். அவரின் திறமையை உணர்த்தும் பல காணொலிகளை எனக்கு அனுப்பி கொண்டிருந்தார்.
தயாரிப்பாளர் மேத்யூ நான் வியந்து பார்த்த இளைஞன். இந்த இளம் வயதிலேயே பொறுப்புணர்ச்சியுடன், கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுகிறார். இவருக்கும் இவருடைய தந்தை சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏகனுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் காத்திருக்கிறது.இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு என்னுடைய நன்றி.
மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிருக்கு வழங்கிய இலவச பேருந்து பயண சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் பலன்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது. இந்தத் திரைப்படம் உள்ளூர் மக்களையும் ரசிக்க வைக்கிறது. உலக மக்களிடமும் சென்றடையும். 'கோழிப்பண்ணை செல்லத்துரை' உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்''
இவ்வாறு அவர் தெரிவித்தார்.