#ChennaiRains | ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்கப்படும் தக்காளி!
கனமழை எச்சரிக்கை எதிரொலியால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது என்றும், இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி, வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்து வரும் 3நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை அடுத்து நேற்று சென்னையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர்.தக்காளி, பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நேற்று (அக். 14) பல இடங்களில் விற்றுத் தீர்ந்தது. இதற்கிடையே, இன்று (அக். 15) காய்கறிகள் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்துள்ளது. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : #WeatherUpdate | தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!
கோயம்பேடு மொத்த சந்தையில் நேற்று ரூ.50 முதல் ரூ.80 என்ற விலையில் தக்காளி விற்றது. இந்நிலையில், தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து, இன்று ரூ.80 முதல் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.