#Koyambedu | அதிரடியாக குறைந்த தக்காளி விலை... ஒரு கிலோவே இவ்வளவு தானா?
சென்னை கோம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
இந்த சூழலில் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக தக்காளி அதிகமான விலைக்கு விற்கப்பட்டது. தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 -ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருவதை அடுத்து தக்காளி அறுவடையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ. 80 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ முதல் தர தக்காளி ரூ. 30-க்கும், இரண்டாம் தர தக்காளி ஒரு கிலோ ரூ. 25-க்கும், மூன்றாம் தர தக்காளி ஒரு கிலோ ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 25 முதல் ரூ.40 வரை விற்பனையானது.