கோவில்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா - பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு!
பெருமாள் கோவில்பட்டி ஸ்ரீகாளியம்மன் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு
100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில்
அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயில் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியதையடுத்து, நேற்று முன்தினம் குருபூஜை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை கரும்புத் தொட்டில் எடுத்தல், பால்குடம் எடுத்தல், முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுத்தல் என பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். காப்பு கட்டி விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மாலை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். காளியம்மன் கோவில் உற்சவ விழாவில் பெருமாள் கோவில் பட்டி, சின்னாளப்பட்டி, மேலக்கோட்டை, அம்பாதுரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.