100 கோடிக்கு மேல் கடன் - வைரலாகும் வதந்திக்கு கோடக் மஹிந்திரா வங்கி வைத்த முற்று புள்ளி!
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தீபக் என்பவர், தனது தாயார் இறந்த பிறகு, அவருடைய வங்கிக் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் கடன் பிரிவிலிருந்து, ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ. 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 என்ற மிக அதிக தொகை கடன் பெறப்பட்டதாக அவருக்குத் தகவல் வந்துள்ளது.
இந்தத் தொகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீபக், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார். ஆனால், அவருக்குத் திருப்தியான பதில் கிடைக்காததால், வங்கிக் கணக்கின் விவரங்களுடன் சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் எழுப்பிய புகார்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி விளக்கம் அளித்துள்ளது. வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "வாடிக்கையாளரின் கணக்கில் கடன் பெற்றதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பதிவு, கணினியில் ஏற்பட்ட தவறான நுழைவு (erroneous entry) காரணமாக இருக்கலாம் என்றும், கணினியில் ஏற்பட்ட பிழை காரணமாக அந்தத் தொகை தவறாகப் பதிவாகியிருக்கலாம் என்றும் வங்கி விளக்கமளித்துள்ளது.
இந்தத் தவறு உடனடியாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், வாடிக்கையாளரின் கணக்கில் எந்தப் பணமும் கடனாகப் பெறப்படவில்லை என்றும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகள் உண்மை இல்லை என்றும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு வாடிக்கையாளர்களுக்கு எந்தவித நிதி இழப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது