For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார் ஈரோட்டை சேர்ந்த ரியா..!

08:06 AM Apr 23, 2024 IST | Web Editor
கூவாகம் திருவிழா  மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார் ஈரோட்டை சேர்ந்த ரியா
Advertisement

கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது. இதில் ஈரோட்டை சேர்ந்த உதவி மருத்துவரான ரியா மிஸ் கூவாகம் பட்டத்தை பெற்றார்.

Advertisement

மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை கூவாகம் திருவிழா நினைவுக் கூறுகிறது. உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நாளை மாலையும், அதனைத்தொடர்ந்து கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : மதுரை குலுங்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் பரவசம்!

வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூரு, கேரளா, கர்நாடகா, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ்கூவாகம் அழகி போட்டி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் ரேம்ப் வாக்கில் நடந்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இப்போட்டியின் இறுதியில் இந்த ஆண்டிற்கான மிஸ் கூவாகம் பட்டத்தை ஈரோட்டை சார்ந்த உதவி மருத்துவரான ரியாவும், தூத்துக்குடியை சார்ந்த நேகா இரண்டாம் இடத்தையும், சென்னையை சார்ந்த யுவான்ஜிலி ஜான் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் இடம்பிடித்தவருக்கு ரூ.50,000 இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.25,000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.11,000 வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாற்று சாதனை படைத்த யுஸ்வேந்திர சஹால்!

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். திருநங்கைகளை குடும்பத்திலுள்ள தாய் தந்தையர்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றகூடாது எனவும், அவர்களை ஆண் பெண்களுக்கு நிகராக பார்க்க வேண்டும் எனவும் முதல் இடம் பிடித்த ரியா வலியுறுத்தினார்.

Tags :
Advertisement