‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’... பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!
சேரங்கோடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் CT 16 கோட்டமலை பாஸ்கர் என்ற ஒற்றை ஆண் காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கொம்பன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ‘கோட்டமலை
பாஸ்கர்’ என்ற ஒற்றை ஆண் காட்டு யானை, கடந்த மூன்று நாட்களாக 15-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேப்போல் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பாக்கு, தென்னை, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் சாமிநாதன் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் வன உதவி பாதுகாவலர் கருப்பையா தலைமையில் கூடலூர் வனக் கூட்டத்தை சேர்ந்த வனத்துறையினர், அதிவிரைவு படையினர், யானை விரட்டும் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 75 பணியாளர்கள் ‘கோட்டமலை பாஸ்கரை’ அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் காட்டு யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க முதுமலை புலிகள் காப்பகத்தில்
இருந்து ‘பொம்மன்’ என்ற கும்கி யானை சேரங்கோடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காட்டு யானைகளை விரட்ட சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வனத்துறை கால்நடை மருத்துவர் தலைமையில் மருத்துவ குழு ஒன்று தயார் நிலையில் இருப்பதாகவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்கள பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.