#KolkataDoctorMurder – மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் வீடு உள்பட 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, கொல்கத்தாவில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது. எய்ம்ஸ் மற்றும் சஃப்தா்ஜங் உள்பட டெல்லியின் பல மருத்துவமனைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்த ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த மருத்துவா் சந்தீப் கோஷ் வீடு மற்றும் இந்த கொலை தொடர்பாக விசாரணை வளையத்திற்குள் உள்ள 14 பேருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (ஆக. 25) சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்றதாக தெரிகிறது.