பஹல்காம் தாக்குதல் எதிரொலி - பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம்!
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
தாக்குதல் சம்பவம் அறிந்த பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார். இதனிடையே அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் ஹெலிகாப்டர் உதவியுடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். தொடர்ந்து அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியானது.
தொடர்ந்து மத்திய கேபினட் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் ரத்து செய்தனர்.
அதன்படி பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தங்களது சுற்றுப் பயணங்கள் மற்றும் பிற அரசு அலுவல் தொடர்பான நிகழ்வுகளை ரத்து செய்தனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டதிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் தொடங்கியது. டெல்லியில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.