#KolkataDoctorMurderCase | போராட்ட களத்திற்கு சென்று பயிற்சி மருத்துவர்களை சந்தித்த மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று (செப். 14) மருத்துவர்கள் போராடும் இடத்திற்கே நேரில் சென்று மருத்துவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐயும், மேற்கு வங்காள அரசும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையை வைத்து விசாரணையை தொடங்கிய நீதிபதிகள் இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர். அவ்வாறு மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சார்பில் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த உத்தரவை மீறியும் போராட்டம் தொடர்கிறது.
இதனிடையே, மாநில தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மம்தா பானா்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர். அதன்படி, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்கள் 26 பேர் கொண்ட குழுவினர் தலைமைச் செயலகத்துக்கு நேற்று முன்தினம் (செப். 12) மாலை 5.25 மணியளவில் வந்தனர்.
பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த அரங்குக்குள் நுழையாமல் அவர்கள் காத்திருந்தனர். நேரலை ஒளிபரப்பு நிபந்தனையைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தலைமைச் செயலாளர் மனோஜ் பன்ட், டிஜிபி ராஜீவ் குமாா் உள்பட மூத்த அதிகாரிகள் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், மருத்துவா்கள் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில், போராடும் இடத்திற்கே சென்று மருத்துவர்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று (செப். 14) சந்தித்தார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “நான் இங்கு உங்கள் மூத்த சகோதரியாக வந்துள்ளேன், முதல்வராக அல்ல. உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று தெரிவித்தனர்.