Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#KolkataDoctorMurder | 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி! அப்படி என்ன நடந்தது?

09:40 PM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்க பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், செவிலியர் அருணா ஷான்பாக்கின் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. யார் இந்த செவிலியர் அருணா ஷான்பாக் என்று பார்க்கலாம்.

Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு கொல்கத்தா பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. இதனிடையே வழக்கின் தீவிரத்தை உணர்ந்து உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (20.08.2024) வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையின்போது இவ்விவகாரம் தொடர்பாக மாநில அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், “இந்த விவகாரத்தில் சிபிஐ விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்த உச்ச நீதிமன்றம், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேசியப் பணி குழுவை அமைத்து உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த விசாரணையின்போது மருத்துவமனையில் இதுபோன்ற பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் சம்பவத்தை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார். “மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு 'அருணா ஷான்பாக்' வழக்கு ஓர் எடுத்துக்காட்டு” என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். அந்த வழக்கு குறித்த தகவலகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விவரத்தை இங்கே காணலாம்...

மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்தவர், அருணா ஷான்பாக். அப்போது 25 வயதான அருணா, அறுவைச்சிகிச்சைப் பிரிவில் செவிலியராகப் பணிபுரிந்தார். பின்னர், அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த சுந்தீப் சர்தேசாய் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதுடன், 1974ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெறுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் 1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இரவு வார்டு ஊழியராகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்ற நபர், பின்னால் வந்து அவரைத் தாக்கினார். மேலும், நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் அருணாவின் கழுத்தை இறுக்கினார். இந்தச் சம்பவத்தில் அருணா சுயநினைவை இழந்தார்.

பின்னர், அருணாவைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, நகையையும் பணத்தையும் சோஹன்லால் எடுத்துச் சென்றுவிட்டார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கான உணவுப் பொருட்களை சோஹன்லால் திருடியதையும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் அருணா தெரிவிப்பதாகக் கூறியதையும் அடுத்தே, அவர் அருணாவைக் கொலை செய்யும் நோக்கத்தில் இருந்துள்ளார்.

இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் மட்டுமே திறந்திருந்தன. வேற எந்த உணர்வுகளும் அவரிடம் இல்லை. அதாவது, கோமா நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். அருணாவின் இந்த நிலையால் குடும்பம் அதிர்ந்துபோனது; திருமணம் நின்றுபோனது. குடும்பத்தினர் அருணாவை உதறியபோதும், மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு உணவு கொடுத்ததுடன், அவருடைய அடிப்படைத் தேவைகளுக்காகவும் உதவி செய்தனர்.

இதற்கிடையே அருணா பாதிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, சோஹன்லால் கைது செய்யப்பட்டார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இது எதுவுமே அருணாவுக்குத் தெரியாது என்பதுதான். சோஹன்லால் மீது திருட்டு, கொலை முயற்சி என இரு வழக்குகளே பதியப்பட்டன. இன்றுபோல், அன்று பாலியல் வன்புணர்வு வழக்கு அவர்மீது பாயவில்லை. இதையடுத்து, அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர் 1980இல் விடுதலை செய்யப்பட்டார்.

அதேநேரத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தபடுக்கையாகக் கிடந்த அருணாவின் நிலையைப் பார்க்க முடியாதவர்கள், அவரைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இருப்பினும் அருணாவின் தோழியும் செவிலியருமான பிரதீபா பிரபு, “மருத்துவமனை அருணாவைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறது, இயற்கையான மரணத்துக்கு அருணா தகுதியானவர்” என்று சொன்னதால், கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை.

2011ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி, ‘அருணா மூளைச்சாவு அடையவில்லை’ என தெரிவித்த உச்ச நீதிமன்றம் அருணாவின் கருணைக் கொலை மனுவை நிராகரித்தது. அப்போதுதான், இவரைப் பற்றி செய்திகள் நாடு முழுவதும் தெரிய ஆரம்பித்தன. இப்படியாக வழக்கிற்குப் பிறகும் கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் உயிரோடு இருந்த அருணா, 2015ஆம் ஆண்டு மே 18 அன்று நிமோனியா தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இன்று எடுத்துக்காட்டியுள்ளார். இதேபோன்ற ஒரு கொடூர சம்பவம்தான் மருத்துவர் ஒருவரின் மீது கொல்கத்தா மருத்துவமனையில் தற்போது அரங்கேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Aruna Shanbaugbrutally attackedDoctor DeathDoctor Protestdog chainKing Edward MemorialKolkataKolkata Doctornews7 tamilNews7 Tamil Updatessexually assaultedSupreme Court of india
Advertisement
Next Article