#KolkataDoctorDeathCase | மேற்குவங்கத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்!
உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைந்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக்கொண்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கு வங்க மாநிலத்தில், மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
தங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும், மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவத்துறை இயக்குநர் ஆகியோர் பதவி விலகக் கோரிக்கை விடுத்துள்ள மருத்துவர்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துவிட்டனர்.
மேலும், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கு வங்க மருத்துவர்கள், போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், துர்கா பூஜை வரவிருப்பதால், பூஜையில் பங்கேற்பது, கொண்டாட்டங்களுக்குத் தயாராகுமாறு மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக்கொண்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அந்த மாநிலத்தில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவர்கள், பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உறைவிட மருத்துவர்களின் போராட்டத்தால், இதுவரை 23 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடமையை விலையாகக் கொடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று தெரிவித்த நீதிபதிகள், உறைவிட மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அத்துடன், மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.