#KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்...
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.
பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தொடர்ந்து 9 ஆவது நாளாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, அவர்கள் எழுப்பிய முக்கிய கேள்விகள் வருமாறு:
- உடற்கூராய்வு நடத்தப்பட்டு பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த தாமதத்துக்கு காரணம் என்ன?
- பெண்ணின் உடலை பார்க்க அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
- மருத்துவமனை நிர்வாகம் இதனை தற்கொலை என மூடி மறைக்க முயன்றுள்ளது; எப்.ஐ.ஆர்-ல் கல்லூரி முதல்வர் பெயர் இடம்பெறாதது ஏன்?
- பெண்ணின் அடையாளம் வெளியே தெரிந்தது எப்படி? அவரது பெயர், புகைப்படம் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது; இதுதான் உயிரிழந்த மருத்துவருக்கு மரியாதை செலுத்தும் விதமா?
மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கே பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டனர்.
பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே உள்ளது. பயிற்சி மருத்துவரின் உயிரிழப்பானது மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வரும் வியாழக்கிழமைக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.