#DoctorsProtest | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை - தமிழக அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் சிகிச்சையை புறக்கணித்த மருத்துவர்கள்!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் புற நோயாளி பிரிவு சிகிச்சையை புறணித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியிலிருந்து முதுகலை 2ம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதே போல் முதல்வர் மம்தா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கிடையே, கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் புற நோயாளி பிரிவு சிகிச்சையை புறணித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் அழைப்பின் பேரில் புற நோயாளிகள் பிரிவு சிகிச்சையை மருத்துவர்கள் புறக்கணித்தனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் போராட்டம் நடைபெறுகிறது.
தர்னா போராட்டம், மனித சங்கிலி, அமைதி ஊர்வலம் என போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்கள் பணியின் போது கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.