#Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது, மருத்துவமனை சூறையாடப்பட்ட நிலையில் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கோரி கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி நிறைவடைந்த பிறகு சுமார் நள்ளிரவு 11 மணியளவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கிருநத அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கினர்.
இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவும் அடித்து நொருக்கப்பட்டது. இதில் மருத்துவமனை முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எறித்தனர்.
இதனைத்யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அனுப்பியவர்கள்தான் மருத்துவமனைக்குள் புகுந்து ஆதாராங்களை அழித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.