கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை - மனித உரிமை ஆணையம் விசாரணை!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி டாக்டர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் டாக்டரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது மனித உரிமை ஆணையம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.