கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு - பாதிக்கப்பட்ட தரப்பின் மூத்த வழக்கறிஞர் திடீர் விலகல்!
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் இருந்து மூத்த வழக்குரைஞர் பிருந்தா குரோவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது.
இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழக்கறிஞர்கள் சௌதிக் பானர்ஜி மற்றும் அர்ஜுன் கூப்டு ஆகியோர் தலைமையிலான சட்டக் குழு ஆதரவு அளித்து வருகின்றது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து மூத்த வழக்குரைஞர் பிருந்தா குரோவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தலையீட்டு காரணிகள் மற்றும் சூழ்நிலைகளை காரணம் காட்டியுள்ளனர். சட்டக் குழுவிற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், வாபஸ் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“விசாரணை காலகட்டத்தில், 43 அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கான ஜாமின் தொடர்ந்து வெற்றிகரமாக எதிர்க்கப்பட்டது. மீதமுள்ள வழக்கு ஆதாரங்கள் அடுத்த 2-3 நாட்களில் முடிக்கப்படும்.
நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் என்ற முறையில், வழக்கறிஞர் விருந்தா குரோவர் மற்றும் அவரது சட்ட கூட்டாளிகள் சட்டம், சான்றுகள் மற்றும் தொழில்முறை நெறிமுறைகளின்படி மட்டுமே சட்ட சேவைகளை வழங்குகிறார்கள். இந்த கட்டத்தில், சில தலையீட்டு காரணிகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக, வழக்கறிஞர் விருந்தா குரோவரின் அறை இந்த விவகாரத்தில் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது” என கூறப்பட்டுள்ளது.